

ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடக்கும் சூழல் இருந்ததால் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலுக்கு மத்தியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான வட்டார வளர்ச்சி கவுன்சில் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 316 வட்டார வளர்ச்சிக் கவுன்சில்களில், 310 கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் தேர்தலில் 1065 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 310 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் ராணுவ கெடுபிடிகள் தளர்த்தப்படாமல், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நடத்தப்படும் வாக்குப்பதிவில் குறைந்த அளவிலான மக்களே வாக்களித்தனர்.
காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிடிபி உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.