வடகொரியாவில் மேலும் ஒரு அமெரிக்கர் கைது

வடகொரியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த கிம் ஹாக் சாங் என்ற அமெரிக்கரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
வடகொரியாவில் மேலும் ஒரு அமெரிக்கர் கைது
Published on

வடகொரியா ஐ.நா.வின் பொருளாதார தடைகளை மீறியும், சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு வடகொரியாவை எச்சரிக்கும் விதமாக தனது ராணுவ படைகளை தென்கொரிய எல்லையில் குவித்தும் வருகிறது.

இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நீடித்துவருவதோடு அமெரிக்கா வடகொரியா இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இதன் விளைவாக வடகொரியாவில் அமெரிக்க பிரஜைகள் கைது செய்யப்படுகின்றனர்.

அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த கிம் சாங் டோக் என்ற அமெரிக்கரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இது வடகொரியா அமெரிக்கா இடையே தூதரக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் வடகொரியாவில் மேலும் ஒரு அமெரிக்கர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த கிம் ஹாக் சாங் என்ற அமெரிக்கரை கடந்த 6-ந் தேதி போலீசார் கைது செய்து உள்ளனர். வடகொரியா இந்த தகவலை நேற்று உறுதி செய்தது. கிம் ஹாக் சாங் அந்த பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட விவசாயம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கல்லூரியில் உள்ள சோதனை விவசாய பண்ணையின் காப்பாளராக பணியாற்றி வந்து உள்ளார்.

கிம் ஹாக் சாங் வடகொரியாவில் கைது செய்யப்பட்ட 4-வது அமெரிக்க பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com