ஆம்பூர் அருகே சென்னை சொகுசு பஸ் கவிழ்ந்து ஐ.டி. பெண் ஊழியர் பலி

ஆம்பூர் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்த விபத்தில் ஐ.டி. பெண் ஊழியர் பலியானார். 15 பேர் படுகாயமடைந்தனர்.
பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்.
பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்.
Published on

ஆம்பூர்:

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஒரு தனியார் சொகுசு பஸ் நள்ளிரவு புறப்பட்டு வந்துக் கொண்டு இருந்தது. பஸ்சில், 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை 4.45 மணிக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் அதிவேகத்தில் பஸ் வந்தது.

அப்போது, ஆம்பூர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆம்பூர் அடுத்த மாதனூர் உடையராஜ பாளையத்தில் வந்தபோது பஸ்சின் முன்புறம் சென்ற காரின் டயர் திடீரென வெடித்து பஞ்சரானது. இதனால் கார் தாறுமாறாக ஓடியது. அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக, பஸ்சை இடது புறமாக டிரைவர் திருப்பினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடையேனடையை சேர்ந்த தினேஷ்குமார் மகள் தீஷா (வயது 25) என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார்.

தீஷா, பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனிக்கு செல்வதற்காக சொகுசு பஸ்சில் புறப்பட்டு வந்தபோது, விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதேபோல் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

தகவலறிந்ததும், ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் மழை பெய்ததால் மீட்பு பணி தாமதமானது.

காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக் கிடமாக இருப்பதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பலியான ஐ.டி. பெண் ஊழியர் தீஷா உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com