ஆத்தூர் அருகே அம்பேத்கர் சிலை அகற்றம்- வி.சி. கட்சியினர் தர்ணா போராட்டம்

ஆத்தூர் அருகே இன்று அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் அருகே அம்பேத்கர் சிலை அகற்றம்- வி.சி. கட்சியினர் தர்ணா போராட்டம்
Published on

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்த சிலர் நள்ளிரவு அனுமதியின்றி அம்பேத்கர் நகரில் ஒரு பீடம் அமைத்து அதில் அம்பேத்கர் உருவ சிலையை வைத்து திறந்தனர். அரசு அனுமதி வழங்காமல் சிலை திறந்த சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், ஆத்தூர் போலீஸ் நிலையத்துக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், டி.எஸ்.பி. பொன்கார்த்திக்குமார், மற்றும் வருவாய் அதிகாரிகள் மற்றும் ஆத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜே.சி.பி. வாகனத்துடன் அங்கு சென்று அம்பேத்கர் சிலையை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பீடத்தை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

இதற்கு அங்கு கூடி நின்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேத்கர் உருவ சிலையை கொண்டு செல்ல கூடாது என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். நேரம் செல்ல செல்ல அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து அம்பேத்கர் சிலை முழுவதும் பாதுகாப்பாக துணிகளால் சுற்றி மூடப்பட்டு ஒரு வாகனத்தில் ஏற்றி சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் அம்பேத்கர் சிலையை நிறுவ வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினார்கள். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் உரிய அனுமதி பெறாமல் அம்பேத்கர் நகரில் சிலையை வைத்தவர்கள் யார்? என்பது குறித்து சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி. சி.ஐ.டி, ஓ.சி.ஐ.யூ உள்ளிட்ட உளவுபிரிவு மூலம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com