அரசியல் காரணங்களால் என்னை சிக்க வைத்து விட்டனர் - தலைமறைவான மெகுல் சோக்சி பேட்டி

அரசியல் காரணங்களால் என்னை சிக்க வைத்து விட்டனர் என்று வங்கி மோசடி மன்னன் மெகுல் சோக்சி கூறியுள்ளார். #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi
மெகுல் கோக்சி
மெகுல் கோக்சி
Published on

புதுடெல்லி:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக நிரவ்மோடி, அவரது உறவினர் மொகுல் சோக்சி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. அவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டனர்.

அதில், மெகுல் சோக்சி தற்போது ஆன்டிகுவா நாட்டில் இருக்கிறார். அந்த நாட்டின் குடியுரிமை ஏற்கனவே அவருக்கு உள்ளது. அதை வைத்து அங்கு தங்கி இருக்கிறார்.

அங்கிருந்து முதல் முதலாக அவர் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் 50 ஆண்டுகளாக இந்த தொழிலில் இருக்கிறேன். நான் எந்த கிரிமினல் குற்றத்திலும் ஈடுபட்டது இல்லை.

வியாபார நிறுவனங்கள் நடத்தினால் சில வர்த்தக பிரச்சினைகள் எழுவது வழக்கம் தான். ஆனால், நான் மோசடி எதுவும் செய்யவில்லை.

எங்கள் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் கிளை நிறுவனங்கள் மற்றும் பிரான்சிசிஸ் நிறுவனங்களை நடத்தி வருகிறது.

இவ்வளவு காலமும் நாங்கள் நல்ல பெயர் எடுத்து இருக்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் 150 விருதுகள் கிடைத்துள்ளன.

ஜனாதிபதி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்று இருக்கிறோம். எங்கள் மீது யாரும் புகார் கூறியது இல்லை.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வர்த்தக தொடர்புகள் வைத்து இருக்கிறோம். அந்த வி‌ஷயத்தில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை.

ஏனென்றால், கணக்கு வழக்கு, மற்ற விவரங்களை அதிகாரிகள் தான் பார்த்து கொண்டனர். அதில் ஏதோ தவறுகள் நடந்திருக்கலாம். அதை மோசடி என்று கருத முடியாது.

ஆனால், அரசியல் காரணங்களால் எங்களை சிக்க வைத்து விட்டார்கள். இந்தியாவில் பல ஆயிரம் கோடிக்கு நாங்கள் முதலீடு செய்திருக்கிறோம். இவ்வாறு பெரிய அளவில் முதலீடு இருக்கும் போது நாங்கள் குற்றங்கள் செய்து மாட்டி கொள்வோமா?

அப்படி நடந்தால் எங்களுடைய சொத்துக்களுக்குதானே இழப்பு ஏற்படும். நாங்கள் திட்டமிட்டு மோசடி செய்தது போல் காட்டுகிறார்கள். அவ்வாறு மோசடி செய்திருந்தால் ஏன் இவ்வளவு முதலீடுகளை இந்தியாவில் செய்ய போகிறோம்?

நான் வெளிநாட்டுக்கு தப்பி வரவில்லை. எங்கள் மீது புகார் கொடுப்பதற்கு முன்பாகவே நான் வெளி நாடு வந்து விட்டேன். எனது இருதயத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு வந்தேன்.

இப்போதுகூட என்னால் வெளியூர் பயணம் செய்ய முடியாது. எனவேதான் இந்தியாவுக்கு செல்ல முடியவில்லை.

மேலும் இப்போது எனது பாஸ்போர்ட்டையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். நான் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

இந்தியாவுக்கு சென்றால் என்னை கைது செய்து ஜெயிலில் அடைப்பார்கள். அங்கு எனது உயிருக்கு ஆபத்து எற்படலாம்.

ஏற்கனவே இந்தியாவில் கூட்டமாக சேர்ந்து மனிதனை அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் நடக்கிறது. எனக்கும் அதுபோல் நேரிடலாம். ஜெயிலில் சக கைதிகளே மற்ற கைதிகளை அடித்து கொல்லும் சம்பவமும் நடக்கிறது.

அதே போல் என்னையும் பெரிய கிரிமினல் குற்றவாளிகள் ஜெயிலில் வைத்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

எனவேதான் இந்தியா வரவில்லை. இந்தியாவில் எனது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. நிறுவன கணக்கு, வழக்குகள் எல்லாவற்றையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். நான் இந்தியா வந்தால் செயல்பட முடியாது.

அதே நேரத்தில் ஆன்டிகுவா நாட்டில் இருக்கும் நான் இங்கு சந்தோ‌ஷமாக இருப்பதாக கருத முடியாது. பல வேதனைகளுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.

என்னை மோசடிக்காரன் போல் சித்தரித்து இருப்பதும், டி.வி.களில் என்னை மையமாக வைத்து விவாதங்கள் நடத்துவதும் வேதனையாக இருக்கிறது. இவை எல்லாம் ஒரு மனித உரிமை மீறல் செயல்.

இவவாறு அவர் கூறினார். #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com