

டாஸ் வென்ற சுர்ரே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சுர்ரே அணி 50 ஒவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் மார்க் ஸ்டோன்மேன் 149 பந்தில் 12 பவுண்டரிகளுடன் 144 ரன்கள் சேர்த்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். சங்ககரா 30 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாட்டிங்காம்ஷைர் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அதிரடியாக விளையாட மற்ற வீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ஹேல்ஸ் சிக்ஸராகவும், பவுண்டரியுமாக விளாசினார். மறுமுனையில் லம்ப் (4), வெசல்ஸ் (6), பட்டேல் (7), டெய்லர் (11), முல்லானி (5) அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினார்கள்.
சதமடித்த மகிழ்ச்சியில் அலெக்ஸ் ஹேல்ஸ்
ஹேல்ஸ் 83 ரன்னில் சதம் அடிக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு ஹேல்ஸ் உடன் கேப்டன் ரீட் ஜோடி சேர்ந்தார். இவர் ஹேல்ஸ் அதிரடியாக விளையாட ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் நாட்டிங்காம்ஷைர் அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஹேல்ஸ் 167 பந்தில் 20 பவுண்டரி, 4 சிக்சருடன் 187 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ரீட் 57 பந்தில் 58 ரன்கள் சேர்த்தார்.