பாலமேட்டில் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி குடிமகன்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் மதுக்கடையை திறக்க வலியுறுத்தி குடிமகன்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேட்டில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியில் இருந்த ஒரு மகளிர் அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது.

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி கடையை மூட டாஸ்மாக் நிறுவனத்தை வலியுறுத்தியது. அதன் பேரில் நேற்று பகல் 12 மணிக்கு வழக்கம் போல் திறக்க வேண்டிய கடை திறக்கப்படவில்லை. இதனால் மூடிய கடையை திறக்க வலியுறுத்தி மதுப்பிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலமேடு போலீசார் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் கடை மூடப்பட்டது என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதுப்பிரியர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த மதுபாட்டில்களை வாகனத்தின் மூலம் வேறு கடைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் அந்தபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மதுஅருந்துபவர்கள் வாகனத்தில் மதுபாட்டில் ஏற்றுவதை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அங்கு வந்த மது அருந்தும் ஒருவர் கூறும்போது, பால மேட்டில் இருந்து 6 கி.மி அலங்காநல்லூர் சென்று தான் மதுபாட்டில் வாங்க செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதி மது அருந்துவோரின் நலன் கருதி பாலமேட்டில் மாற்று இடத்திலாவது கடையை திறந்து வழக்கம் போல் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com