மதுபான விலை உயர்வால் புதுவையில் களை இழந்த புத்தாண்டு கொண்டாட்டம்

மதுபான விலை உயர்வு, கேளிக்கை வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு புதுவையில் புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகள் குறைந்து கொண்டாட்டம் களையிழந்துள்ளது.
மதுபானம்
மதுபானம்
Published on

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவை என்றவுடன் நினைவுக்கு வருவது விலை குறைவான, ரக ரகமான மதுபான வகைகள்தான்.

வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் புதுவைக்கு படையெடுத்து வந்து மது வகைகளை அருந்தி உற்சாகமாகி செல்வது வாடிக்கையான ஒன்று. அதுவும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதுவை மிகவும் பிரசித்தி பெற்றது.

புதுவையில் பல்வேறு ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நள்ளிரவு வரை மது விற்பனையும், கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெறும்.

இதனால் ஆண்டுதோறும் புதுவைக்கு புத்தாண்டு கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிய தொடங்கி உள்ளனர். கடந்த ஒரு வாரமாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது.

இருப்பினும் இந்த ஆண்டு மதுபான விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு காரணம் அரசின் கலால்துறை மதுபான விலையை கணிசமாக உயர்த்தியதுதான் காரணம்.

கலால் வரி, கூடுதல் கலால்வரியை மதுபான வகைகளுக்கும், பீர் வகைகளுக்கும் உயர்த்தி உள்ளனர். சுமார் 20 சதவீதம் வரை உயர்த்தி உள்ளனர். இதனால் ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.30 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

பீர் விலை ஒரு பாட்டில் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படும் விலைக்கும், புதுவையில் விற்கப்படும் மதுபான விலைக்கும் சொற்ப அளவில்தான் வித்தியாசம் உள்ளது. இதனால் புதுவையில் மதுபானம் அருந்துவதற்காக பயணிப்பவர்களின் வருகை குறைந்துள்ளது.

வித விதமான மதுபானங்களை ருசிப்பவர்களும் தங்களின் பயன்பாட்டை குறைத்துள்ளனர். வழக்கமாக டிசம்பர் 31-ந் தேதி இரவு புதுவையில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் படையெடுத்து வருவர்.

மதுபான விலை உயர்வால் இந்த ஆண்டு இவர்களின் வருகை அதிகளவு இருக்குமா? என தெரியவில்லை. இதனிடையே புத்தாண்டை வரவேற்கும் விதமாக அனைத்து ஓட்டல்களிலும் மது, இசை, உணவு விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள். ஜோடிகள், தனிநபர் என டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும்.

இந்த விருந்து நிகழ்ச்சிகளில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்க மிகவும் விரும்புவர். நகர பகுதிகளில் நடைபெறும் ஓட்டல்களை விட கடற்கரை ரிசார்ட்டுகளில் நடைபெறும் விருந்துகள் மிகவும் பிரபலம். இதற்காக முன்கூட்டிய ரிசார்ட்டுகளில் முன்பதிவு செய்து வந்து தங்குவர்.

கடந்த சில ஆண்டாக நகராட்சி கேளிக்கை வரி 25 சதவீதம், நகராட்சி உரிம கட்டணமாக ரூ.5 ஆயிரம், கலால்துறையின் சிறப்பு அனுமதிக்கு ரூ.10 ஆயிரம் ஆகியவை வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. இதனால் விருந்து நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை.

இதனால் இதுவரை பெரும்பாலான ஓட்டல்களிலும் ஆடல்-பாடல், விருந்து நிகழ்ச்சி நடத்த முன்வரவில்லை. இதுவும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகத்தை களை இழக்க செய்துள்ளது.

கடந்த ஆண்டு புதுச்சேரி நகராட்சி பகுதிகளில் 19 நிகழ்ச்சிகள், உழவர்கரை நகராட்சி பகுதிகளில் 3 நிகழ்ச்சிகள் என 22 இடங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆனால், இந்த ஆண்டு இதுவரை 5 நிகழ்ச்சிகள் மட்டுமே நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் 4 விருந்து நிகழ்ச்சிகள் ஓட்டல்களிலும், ஒரு நிகழ்ச்சி பொது வெளியிலும் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஓட்டல்கள் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கேட்டு குறைந்த அளவே விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், வரிகள் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் எனவும் நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசை பொறுத்தவரை வரி வருவாய்க்காக மதுபான விலையை உயர்த்தினர். ஆனால், இந்த விலை உயர்வு புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை முழுமையாக தடை செய்து விடுமோ? என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com