பரமக்குடியில் மது போதையில் தகராறு- வாலிபர் கொலை

பரமக்குடியில் மது போதையில் நடந்த தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். மேலும் 5 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
கொலை
கொலை
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 25). இவரும், இவருடைய நண்பர்கள் 6 பேரும் நேற்று பகலில் பரமக்குடி பொன்னையாபுரம் அருகே உள்ள கல்லூரி கண்மாய் கரையில் நின்று குடிபோதையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த பொன்னையாபுரத்தை சேர்ந்த அழகர் மகன் ஆனந்த் (26) என்பவர், தான் வைத்திருந்த அரிவாளால் ஜெயக்குமாரின் கழுத்து மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டினாராம். இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர் மற்றும் எமனேசுவரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஜெயக்குமார் உடலை பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஜெயக்குமார் கொலை தொடர்பாக ஆனந்த் பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இச்சம்பவம் குறித்து எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் மற்றும் சரண் அடைந்த ஆனந்த் ஆகியோர் மீது பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com