வடசேரியில் மது பாட்டில்களை பதுக்கிய தி.மு.க. பிரமுகர் மீது வழக்கு

வடசேரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கிய தி.மு.க. பிரமுகர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
வழக்கு
வழக்கு
Published on

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வடசேரி பகுதியில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையில் போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் சுப்பையார்குளம் பகுதியில் வரும் போது போலீசாரை பார்த்ததும் அங்கு நின்ற வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். ஆனால் அந்த வாலிபர் போலீசார் பிடியில் சிக்காமல் தப்பிச் சென்றார். வாலிபர் நின்ற பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு சாக்குமூட்டையில் மது பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சாக்குமூட்டையை போலீசார் அவிழ்த்து பார்த்தபோது 720 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டுச் சென்றனர். மேலும் தப்பிஓடிய மர்ம நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தப்பி ஓடிய நபர் தி.மு.க. பிரமுகர் வேல்முருகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த பிரபு மற்றும் ஒருவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com