ராகுல் காந்தியுடன் இணைந்து செயல்படுவேன் - அகிலேஷ் யாதவ்

நானும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இளைஞர்கள். நாங்கள் இணைந்து செயல்பட்டு நாடு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் கூறினார்.
ராகுல் காந்தியுடன் இணைந்து செயல்படுவேன் - அகிலேஷ் யாதவ்
Published on

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ்யாதவ் லக்னோவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயாவதி கட்சியுடன் கடந்த காலங்களில் இருந்த விரோத போக்கை மறந்து விட எங்கள் கட்சி தயாராக உள்ளது. பழைய சம்பவங்கள் மறக்கப்பட்டாக வேண்டும்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைத்தோம். காங்கிரசுடன் எங்களுக்கு நல்லுறவு உள்ளது. அந்த நல்லுணர்வு தொடர்ந்து நீடிக்கும்.

நானும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இளைஞர்கள். நாங்கள் இணைந்து செயல்பட்டு நாடு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம். இடைத்தேர்தல் வெற்றிக்காக ராகுல் காந்தியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன்.

சமாஜ்வாடி கட்சியினர் அனைவருக்கும் மரியாதை கொடுத்து நடத்துவார்கள். அதனால்தான் எங்களுக்கு அனைவருடனும் நல்லுறவு உள்ளது.

இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கேள்வி கேட்கலாம். எதிர்காலம் குறித்து யாராலும் இப்போதே கூற முடியாது. இடைத்தேர்தலில் காங்கிரஸ் எங்கள் கூட்டணிக்கு எதிராக பிரசாரம் செய்ததை பொறுத்தவரை பழைய வி‌ஷயங்களை மறப்பவர்களே வெற்றி பெறுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் முன்பு ஆட்சியில் இருந்த நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தினோம். இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் வாக்குப்பதிவு எந்திரம் மீதான சந்தேகம் நீடிக்கிறது. வாக்குப் பதிவு எந்திரங்களில் கோளாறுகள் ஏற்பட்டன. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் எங்கள் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். வாக்குச்சீட்டு முறைதான் சரியான வாக்குப்பதிவு முறையாகும். அதுதான் மக்கள் தங்களின் கோபத்தை தேர்தல்களில் வெளிப்படுத்த உதவியாக இருக்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com