விமான பயணிகளுக்கு ஆதார் கட்டாயம்: பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்தது

விமான பயணிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் திட்டம், பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.
விமான பயணிகளுக்கு ஆதார் கட்டாயம்: பெங்களூர் விமான நிலையத்தில் அமலுக்கு வந்தது
Published on

ஏற்கனவே பான் கார்டு, வருமானவரி தாக்கல் மற்றும் வங்கிகளில் கணக்கு தொடங்க, அரசின் மானியங்கள் பெற, புதிய வாகன பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் ரேசன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதார் எண் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது விமான பயணத்துக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. விமான பயணத்துக்கு பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தில் பயணம் செய்ய பயணிகள் விமான நிலையத்தில் நுழையும் போதே அந்த நுழைவு வாயிலில் வைக்கப்பட்டு உள்ள எந்திரத்தில் தங்களது கையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஆதார் அட்டைக்காக பதிவு செய்து வைத்துள்ள கைரேகையும் இப்போது ஸ்கேன் செய்கிற பயணியின் கைரேகையும் ஒன்றாக உள்ளதா? என்பது இதன் மூலம் தெரிந்து விடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் அந்த பயணி விமானத்தில் பயணம் செய்ய முடியும்.


இதன் மூலம் ஒருவர் பாஸ்போர்ட்டில் இன்னொருவர் புகைப்படத்தை ஒட்டி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓட சாத்தியமில்லை. இந்த திட்டம் சோதனை முயற்சியாக தற்போது ஐதராபாத் விமான நிலையத்தில் அமுல்படுத்தப்பட்டு உள்ளது.

பெங்களூரு விமான நிலையத்திலும் தற்போது இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் பயணிகள் இனி அடையாள அட்டைகளுடன் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலையம் மேம்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com