தீபாவளி அன்று சவுகார்பேட்டையில் காற்று மாசு 8 மடங்கு அதிகம்

தீபாவளி அன்று சென்னையில் அதிகபட்சமாக சவுகார்பேட்டையில் காற்று மாசு வழக்கத்தைவிட 8 மடங்கு அதிகம் இருந்ததாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது.
தீபாவளி அன்று சவுகார்பேட்டையில் காற்று மாசு 8 மடங்கு அதிகம்
Published on

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் வெளிவரும் புகை காற்று மண்டலத்தின் இயல்புநிலையை தாக்குகிறது. இதனால் வளிமண்டலத்தில் தாக்கம் ஏற்பட்டு, பொதுமக்களின் உடல்நலத்துக்கும் தீங்கு ஏற்படுகிறது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுடன், 125 டெசிபெல்லுக்கு அதிகமான ஒலி உண்டாக்கும் பட்டாசுகளை வெடிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மாசு கட்டுப்பாடு வாரியங்களும் தீபாவளி பண்டிகை காலங்களில் ஏற்படும் காற்று மாசு அளவை கண்காணிக்க மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதலின்படியும் மற்றும் ஒலி மாசு அளவை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படியும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்தவகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் மூலமாக தீபாவளிக்கு முந்தைய வாரம் மற்றும் தீபாவளி நாளன்று 24 மணி நேர காற்று தர ஆய்வும், 6 மணி நேர ஒலி அளவு சோதனையும் செய்து பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தாக்கத்தை கண்டறிந்து வருகிறது.

இதன்படி 12-ந் தேதி மற்றும் 18-ந் தேதிகளில் (தீபாவளி) ஆய்வுகள் செய்யப்பட்டு, வளிமண்டலத்தில் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் காற்று மாசு காரணிகளான மிதக்கும் துகள்கள், சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது அதிக அளவிலேயே காணப்பட்டது.

இதற்கு காரணம் தீபாவளி நாளன்று மழை, வெயில், காற்று இல்லாமல் இதமான காலநிலை நிலவியதால் காற்றில் மிதக்கும் நுண்துகள்கள் பரவாமல் ஒரே இடத்தில் நிலை கொண்டன. இதனால் அதிக அளவு காற்றில் மாசு கண்டறியப்பட்டது.

குறிப்பாக சென்னை திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர், நுங்கம்பாக்கம் ஆகிய குடியிருப்பு பகுதிகள், சவுகார்பேட்டை வர்த்தகம் மற்றும் குடியிருப்பு பகுதி, தியாகராயநகர் வர்த்தக பகுதிகளில் 18-ந் தேதி, தீபாவளிக்கு முந்தைய வாரமான 12-ந் தேதிகளில் காற்று மாசு ஆய்வு செய்யப்பட்டது. இதில் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவான 80 மைக்ரோ கிராமுக்கு உட்பட்டதாகவே 2 நாட்களும் இருந்தன.

ஆனால் ஆய்வு செய்யப்பட்ட 5 இடங்களிலும் மிதக்கும் துகள்கள் 100 மைக்ரோ கிராம் அளவை விட தீபாவளி அன்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக சவுகார்பேட்டையில் 8 மடங்கு மாசு அதிகம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com