

அரியானா மாநிலம் பல்வால் பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் தினக்கூலி வேலை செய்து வருகிறார். அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிகிறது. மேலும், கஞ்சா பழக்கம் உடையவர்.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், வீட்டில் இருக்கும்போது கத்தியை விழுங்கினால் என்ன? என்று அவருக்குத் தோன்றியிருக்கிறது.
உடனே கத்தியயை எடுத்து விழுங்கியிருக்கிறார். முடியவில்லை என்பதால், வாயில் வைத்து தண்ணீர் குடித்து விழுங்கியுள்ளார். கத்தி கல்லீரலில் சென்று சிக்கியுள்ளது.
ஆனால் கத்தியை விழுங்கியதும் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை. நாட்கள் செல்ல செல்ல சாப்பிடுவதற்கு கஷ்டப்பட்டுள்ளார். அதன்பின் உடல் மெலிய ஆரம்பித்துள்ளது. அடிவயிற்றில் வலி அதிகமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அந்த வாலிபர் எய்ம்ஸ் மருத்துவமனை சென்றுள்ளார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தனர். கல்லீரலில் 20 செ.மீட்டர் நீளம் கொண்ட கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கத்தி சுவாச குழாய், உணவுக் குழாய், இதயம் என எந்தவித பாகத்தையும் காயப்படுத்தாமல் நேராக கல்லீரல் சென்றதை கண்டு வியப்படைந்தனர். சிறு ஊசியை விழுங்கினால் கூட ஒன்றிரண்டு துளைகளை ஏற்படுத்தி விடும் என்று கூறும் டாக்டர்கள், இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அவர் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் ரத்தம் ஏற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுமார் மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் கத்தியை நீக்கியுள்ளனர். ஏழு நாட்கள் ஐசியூ-வில் இருந்து அந்த நபர் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டுள்ளார்.