

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட அமித் ஷா மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெற்றனர். ஆனால், நீண்ட இழுபறிக்கு பின்னரே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது படேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், டெல்லி ஜந்தர்மந்தரில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் அகமது படேல் இன்று கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “குஜராத்தில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம். பா.ஜ.க.வினர் அதை பெரிய விஷயமாக கருதியதால், அதில் தோற்று விட்டனர். இதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்.
பா.ஜ.க.வில் உள்ள இரண்டு பேரை கண்டு அனைவரும் அச்சமடைந்து வருகின்றனர். ஒருவர் அரசியல் அதிகாரம் படைத்தவர். மற்றொருவர் கூடுதலான அரசியல் அதிகாரம் படைத்தவர். இவர்கள் இருவரும் மத்திய அரசின் விசாரணை முகமைகளை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.15 கோடி பேரம் பேசப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார். ஆனால், நல்லவேளையாக எம்.எல்.ஏ.க்கள் அதை நிராகரித்து விட்டனர்.