அப்துல்கலாம் மணிமண்டபத்தில் அக்னி மாதிரி ஏவுகணை அமைப்பு

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அக்னி மாதிரி ஏவுகணை அமைக்கப்படுகிறது. இதற்காக ஐதராபாத்திலிருந்து 60 அடி நீளத்தில் “அக்னி” ஏவுகணையின் மாதிரி வடிவம் லாரிமூலம் கொண்டுவரப்பட்டது.
அப்துல்கலாம் மணிமண்டபத்தில் அக்னி மாதிரி ஏவுகணை அமைப்பு
Published on

ராமேசுவரம் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அக்னி மாதிரி ஏவுகணை அமைக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவிடம் உள்ளது. இங்கு மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சார்பில் ரூ. 50 கோடி மதிப்பில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக ரூ. 15 கோடியில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இதன் திறப்பு விழா, அப்துல்கலாமின் 2-வது நினைவு தினமான வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார்.

திறப்பு விழா அன்று, நினைவிட வளாகத்தில் கண்காட்சி அமைக்கப்படுகிறது. அதில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு இஸ்ரோ மற்றும் பாதுகாப்புத் துறையில் அவர் பணியாற்றிய புகைப்படங்கள் இடம் பெறுகிறது.

அப்துல்கலாம் கண்டுபிடித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் “அக்னி” ஏவுகணையும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து 60 அடி நீளத்தில் “அக்னி” ஏவுகணையின் மாதிரி வடிவம் லாரிமூலம் பேய்க்கரும்பு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அப்துல்கலாம் மணிமண்டபத்தை திறந்து வைக்க வரும் பிரதமர் மோடி, ரூ. 50 கோடி மதிப்பில் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை அமைக்கப்பட்டுள்ள கடற்கரையோர சாலையையும் திறந்து வைக்கிறார்.

திறப்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com