காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் மகனை மீண்டும் விசாரிக்க முடிவு

காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம். விரைவில் ஸ்ரீதரை பிடிப்போம் என்று காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி கூறினார்.
காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர்
காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர்
Published on

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம், திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர். இவர் மீது ஆள்கடத்தல், கொலை, பணம் பறிப்பு, நிலம் அபகரிப்பு உள்ளிட்ட ஏராளமான வழங்குகள் உள்ளன. போலீசார் தேடுவதை அறிந்ததும் ரவுடி ஸ்ரீதர் வெளிநாடுக்கு தப்பி சென்று விட்டார்.

அவரது மனைவி குமாரி மற்றும் மகள்கள் காஞ்சீபுரத்தில் வசித்து வருகிறார்கள். ஸ்ரீதர் சட்ட விரோதமாக பறித்த ஏராளமான சொத்துக்கள் மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை லண்டனில் இருந்து வந்த ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரை சென்னை விமானநிலையத்திலேயே அமலாக்கத்துறையினர் மடக்கினர். பின்னர் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சுமார் 15 மணி நேரம் சந்தோஷ் குமாரிடம் காஞ்சீபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவரை அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நேற்று காலை சந்தோஷ்குமாரை பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அழைத்தனர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து நேற்று இரவு காஞ்சீபுரம் எல்லப்பன் நகரில் உள்ள ஸ்ரீதர் வீட்டில் சந்தோஷ்குமாரை ஆஜராகும்படி போலீசார் சம்மன் ஒட்டிச்சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இன்றும் சந்தோஷ் குமாரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் அழைத்து உள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீதர் குறித்து பல தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே போலீசாருக்கு கண்ணாமூச்சு காட்டும் ஸ்ரீதர் விரைவில் பிடிபடுவார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமனி கூறும் போது, “ஸ்ரீதர் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளோம்.

ஸ்ரீதர் குறித்து தகவல்கள் கிடைத்து உள்ளன. அவரை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் ஸ்ரீதரை பிடிப்போம்” என்றார்.

தலைமறைவான ரவுடி ஸ்ரீதர் தற்போது இலங்கையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்து உள்ளது.

தூதரகம் மூலம் ஸ்ரீதரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com