கேரளாவில் மீண்டும் கனமழை: பாறைகள் உருண்டதால் ரெயில் சேவை பாதிப்பு

திருவனந்தபுரத்தில் பெய்த கனமழை காரணமாக தம்பானூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
கேரளாவில் மீண்டும் கனமழை: பாறைகள் உருண்டதால் ரெயில் சேவை பாதிப்பு
Published on

பசுமை நிறைந்த கேரளாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அரசு அறிவித்து மத்திய அரசின் வறட்சி நிவாரணத்தை எதிர்பார்க்கும் நிலை உருவானது.

இந்தநிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை ஆரம்பத்தில் இருந்து கேரளாவில் கனமழையாக பெய்தது. இதனால் வறட்சி நீங்கி நீர்நிலைககளில் நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மழை சற்று ஓய்திருந்தது.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் கனமழை பெய்தது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம், கோட்டயம், செங்கணூர், கொல்லம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.

திருவனந்தபுரத்தில் பெய்த கனமழை காரணமாக தம்பானூர் ரெயில்நிலையத்தில் தண்டவாளத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தது. மேலும் தம்பானூர் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 12 ரெயில்களின் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்தும் செய்யப்பட்டது.

தம்பானூர் பஸ் நிலையத்திற்குள்ளும் மழை வெள்ளம் புகுந்ததால் பஸ் நிலையம் குளம்போல மாறியது. இதனால் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைதொடர்ந்து பஸ் நிலையம் முன்பு இருந்தே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தம்பானூர் பஸ் நிலையப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

திருவனந்தபுரம் நகரில் ஓடும் கரமனை ஆற்றில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் ராட்சத மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. திருவனந்தபுரம் எம்.சி. ரோட்டில் நூறு ஆண்டு பழமையான ராட்சத ஆல மரம் வேறோடு சாலையில் சாய்ந்தது.

இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று 6 மணி நேரம் போராடி அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள்.

பாலக்காடு மாவட்டத்தில் வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டிருந்த வயல்களை வெள்ளம் மூழ்கடித்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருச்சூரில் பல இடங்களில் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்து. கொல்லம் மாவட்டத்தில் மின்கம்பிகளின் மீது மரங்கள் விழுந்ததால் மின் தடையும் ஏற்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக சிறையின் கீழ், விழிஞ்ஞம் போன்ற மீனவர் கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்தது. சிறையின்கீழ் பகுதியில் பல மீனவர்களின் படகுகளை கடல் அலை இழுத்துச் சென்றது. கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com