மீண்டும் மதுபார்களுக்கு அனுமதி: கேரள அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

கேரளாவில் மதுவிலக்கு கொள்கையை தளர்த்தி மீண்டும் மதுபார்கள் திறக்க மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு முடிவு எடுத்துள்ளது. கேரள அரசின் இந்த முடிவிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மீண்டும் மதுபார்களுக்கு அனுமதி: கேரள அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது மாநிலம் முழுவதும் 10 ஆண்டுகளில் முழு மதுவிலக்கை அமல்படுத்தப் போவதாக அறிவித்தது.

இதன் முதல் கட்டமாக 5 நட்சத்திர ஓட்டல்களை தவிர்த்து ஏனைய ஓட்டல்களில் செயல்பட்டு வந்த மதுபார்கள் மற்றும் சில்லறை மது விற்பனை கடைகள் மூடப்பட்டன.

இதன் மூலம் சுமார் 712 மதுபார்கள் மூடப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக கேரளாவில் சுற்றுலா தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், மாநிலத்தின் வருவாய் பெரிதும் குறைந்து போனதாகவும், இப்போது ஆட்சி நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி அரசு தெரிவித்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணி அரசு அமல்படுத்திய மதுவிலக்கு கொள்கையை தளர்த்தி மீண்டும் மதுபார்கள் திறக்க அனுமதி வழங்கும் முடிவை மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு எடுத்துள்ளது.

திருவனந்தபுரத்தில் நேற்று இதனை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. மதுபார்கள் மூடிய பின்பும் மது அருந்துவோர் எண்ணிக்கை குறையவில்லை. எனவே எங்கள் அரசு மது குடிக்க நிர்ணயித்த வயதை 21-ல் இருந்து 23 ஆக உயர்த்தி உள்ளோம். மேலும் மதுவினால் ஏற்படும் தீமைகளை விளக்கி விழிப்புணர்வு பிரசாரங்களும் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி கூறும்போது, இது துரதிர்ஷ்டவசமானது. நல்லதை விரும்புகிறவர்களுக்கு இவர்கள் மீண்டும் மதுக்கடைகளை திறக்கும் முடிவு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மதுவிலக்கு தொடர்பாக கொண்டு வந்ததை தற்போது முழுமையாக மாற்றி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் எம்.எம். ஹசன் கூறும்போது, கேரளாவில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு பின்னால் ஊழல் இருக்கிறது. சாராய வியாபாரிகளுடன் அரசுக்கு உள்ள தொடர்பை இது காட்டுகிறது என்றார்.

பா.ஜனதா கட்சி தலைவர் கும்மணம் ராஜசேகரன் கூறும்போது, ஆட்சிக்கு வரும் முன்பு கேரளாவில் மது விற்பனையை குறைப்போம் என்றவர்கள், இப்போது மது பார்களை திறக்க அனுமதி வழங்கி உள்ளனர். இதன் மூலம் கேரள மக்களை ஏமாற்றி விட்டனர் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com