கோவா சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து இருவர் ராஜினாமா

கோவா சர்வதேச திரைப்பட விழா நடுவர் பொறுப்பில் இருந்து தேர்வுக்குழு தலைவர் சுஜோய் கோஷ் உறுப்பினர் அபுர்வா அஸ்ரானி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
சுஜோய் கோஷ் - அபுர்வா அஸ்ரானி
சுஜோய் கோஷ் - அபுர்வா அஸ்ரானி
Published on

கோவா தலைநகர் பனாஜியில் வரும் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 48-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரையிடப்படுவதற்கான இந்திய திரைப்படங்கள், மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களை தேர்வு செய்வதற்காக 13 உறுப்பினர்களை கொண்ட நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ‘எஸ். துர்கா’ என்ற மலையாளப் படம் மற்றும் ‘நியூட்’ (நிர்வாணம்) என்ற மராத்தி மொழிப் படம் ஆகிவற்றை நீக்கம் செய்து திரையிடப்படும் இந்திய படங்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இது தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோவா திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பிரபல பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் நேற்று அறிவித்திருந்தார்.

அவரை தொடர்ந்து தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரபல தேசிய விருது பெற்ற இந்திப் பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியருமான அபுர்வா அஸ்ரானி இன்று தெரிவித்துள்ளார்.

தேர்வுக்குழு தலைவர் சுஜோய் கோஷ் எடுத்த முடிவை வரவேற்பதாகவும், மிக தரமான படங்களை காட்சிப்படுத்தும் பொறுப்பில் இருந்து தவறிவிட்ட நிலையில் கோவா திரைப்பட விழாவில் பங்கேற்க எனது மனசாட்சி தடையாக உள்ளதால் நடுவர் பொறுப்பில் இருந்து விலக தீர்மானித்ததாகவும் அபுர்வா அஸ்ரானி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com