

ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2 டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வேவும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது போட்டி நேற்று சார்ஜாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹமில்டன் மசகாட்சா, சாலொமன் மிரே ஆகியோர் களமிறங்கினர். மசகாட்சா 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பிரண்டன் டெய்லர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து சாலொமன் மிரே 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் கிரேக் எர்வின், சிகந்தர் ரசா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறிது நேரம் நிதானமாக விளையாடி இந்த ஜோடியை ரஷித் கான் பிரித்தார். எர்வின் 39 ரன்களிலும், ரசா 38 ரன்களிலும் அடுத்தடுத்து ரஷித் கான் பந்தில் எல்.பி.டபுல்யூ ஆகி ஆட்டமிழந்தனர்.
ஜிம்பாப்வே அணி 34.3 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் ரஷித் கான் 5 விக்கெட்களும், முஜீப் சத்ரான் 3 விக்கெட்களும், குல்பாதின் நயிப், தவ்லத் சத்ரான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மொகமத் ஷசாத்தும், இஹ்சனுல்லா ஜனட்டும் களமிறங்கினர். ஷசாத் 7 ரன்களிலும், இஹ்சனுல்லா 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ரஹ்மத் ஷாவுடன், நசிர் ஜமல் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர்.