

பாபநாசம்:
தஞ்சை அடுத்த அம்மாபேட்டை சின்னகடைவீதி பகுதியில் கலியமூர்த்தி மற்றும் தனலட்சுமி தம்பதியினர், வசித்து வந்தனர். குடும்ப வறுமையின் காரணமாக டென்மார்க்கை சேர்ந்த வெவ்வேறு தம்பதியினருக்கு தங்களது மகன்களான டேனியல் ராஜன், டேவிட் சாந்தகுமார் ஆகியோரை தத்து கொடுத்து விட்டனர். இந்த சம்பவம் நடந்தது 1979-ம் ஆண்டு. இந்த நிலையில் இரண்டு குழந்தைக்கு தந்தையான நிலையில், 40 ஆண்டுக்கு பிறகு, டென்மார்க்கில் தத்துக்கொடுத்த டேவிட் கில்டென்டல் நெல்சன் (வயது41) தனது தாயை தேடி இந்தியாவுக்கு வந்தார்.
கடந்த 24-ந் தேதியில் இருந்து, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள முதியவர்கள், பேருராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ.,அலுவலம், கோவில்கள் என கையில், தாய் போட்டோவை வைத்துக் கொண்டு விசாரித்து வருகிறார். இந்த பாசக்கார மகனின் போராட்டம் அப்பகுதியில் உள்ளவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.
இது குறித்து டேவிட் கில்டென்டல் நெல்சன் கூறியதாவது;-
கடந்த 1978- ம் ஆண்டு பிறந்த என்னை, 1979-ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம், டென்மார்க்கை சேர்ந்த டானிஸ் என்பவருக்கு தத்துக்கொடுக்கப்பட்டேன். சாந்தகுமார் என்கிற என் பெயர், டேவிட் கில்டென்டல் நெல்சன் மாற்றப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தேன். டென்மாரிக்கில் உள்ள பங்குசந்தை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். திருமணாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில், எனது நண்பர் ஒருவரை சந்திக்க வந்தேன், அப்போது எனது உருவ அமைப்புகள், தமிழர்கள் போல இருப்பதை உணர்ந்தேன். அதன்பிறகு டென்மார்க் சென்று, தத்து வாங்கியவரிடம் விசாரித்த போது, அவர்கள் உண்மை விளக்கினார்கள்.
அப்போது முதல் எனது பெற்றோரை பார்க்க வேண்டும் என்கிற ஆசை என்னை தொற்றிக் கொண்டது. அன்று முதல் இந்த தேடல் தொடங்கியது. ஒரு மாதகாலம் தேடியும் எந்த விவரமும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தியுடன் திரும்பிச் சென்றுவிட்டேன்.
2017-ல் புனேவில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அருண் டோஹ்லி என்பவரின் அறிமுகம் கிடைத்தது. எனது கதையை அவரிடம் விளக்கினேன். அவர் தனது வக்கீல்அஞ்சலி பவார் மூலம், என்னை சிறு வயதில் தத்துக் கொடுக்க உதவிய சென்னை பாதிரியார் ஜார்ஜ் என்பவரின் உறவினர்கள் மூலமாக 40 வருடங்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட என் அம்மா மற்றும் குடும்பத்தினர் புகைப்படமும் எனது பிறப்புச் சான்றிதழும் கிடைத்தன.
மேலும் ஓர் அதிர்ச்சியாக என் அண்ணனும் தத்துக் கொடுக்கப்பட்ட விவரமும் அப்போதுதான் தெரியவந்தது. எனது இயற்பெயர் டேவிட் சாந்தகுமார் என்பதும், என் அண்ணன் பெயர் மார்டீன் என்கிற டேனியல்ராஜன் என்பதையும் தெரிந்து கொண்ட நான் அதன்பிறகு டென்மார்க் திரும்பி என் அண்ணனைத் தேடி அலைந்தேன். ஆனால், அவர் வேறு பகுதியில் உள்ள தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார். அவர் டென்மார்க்கில்தான் இருக்கிறார் என்பதால் எப்படியேனும் சந்தித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
தொடர்ந்து சென்னையில் எனது பெற்றோர்கள் வசித்த பகுதியை கண்டுபிடித்து அங்கு போய் பார்த்த போது, அந்த விலாசத்தில் யாரும் இல்லை. தஞ்சை அடுத்த அம்மாபேட்டையில் பெற்றோர்கள் வசித்த இடத்திற்கு வந்து, கையில் உள்ள போட்டோவை வைத்துக்கொண்டு, அவர்கள் வசித்த இடங்களிலும், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட பல வழிகளில் தேடி வருகிறேன். ஆனால் இன்னும் கிடைக்கவில்லை. என்னுடைய தாய் கிடைத்து விட்டால், தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும். எனது குழந்தைகளுக்கு அவர்களின் தந்தை, பாட்டியை காட்ட வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். இவரின் நம்பிக்கைக்கு வழிபிறக்குமா? என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.