கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை எரித்து போராட்டம்

கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரனின் உருவபொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினர்.
கட்சி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு: டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை எரித்து போராட்டம்
Published on

உளுந்தூர்பேட்டை:

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வரும் குமரகுரு எம்.எல்.ஏ., கட்சி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரகுருவின் ஆதரவாளர்கள் உளுந்தூர்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்நிலையம் முன்பு திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் டி.டி.வி.தினகரனின் உருவபொம்மையை எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர். மேலும் முன்னதாக அ.தி.மு.க.வினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதேபோல் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் மேயர் மருதராஜை நீக்கி டி.டி.வி.தினகரன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து மருதராஜ் ஆதரவாளர்கள் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் திரண்டு டி.டி.வி.தினகரன் உருவபொம்மையை எரித்தனர். அவருடைய உருவபடத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தை அடியோடு அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

திண்டுக்கலை அமைப்பு ரீதியாக 2 ஆக பிரித்து, தங்கதுரை எம்.எல்.ஏ.வை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்த டி.டி.வி.தினகரனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பதாகை ஒன்றை எம்.ஜி.ஆர். சிலை அருகே சிலர் வைக்க முயன்றனர். ஆனால், உருவ பொம்மை எரிப்பு போராட்டம் காரணமாக அதை வைக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com