

திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே செம்பட்டி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது67). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது அ.தி.மு.க. ஊராட்சி செயலாளராக இருந்தார்.
இன்று காலை வத்தலக் குண்டு-திண்டுக்கல் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் பூக்கள் பறிப்பதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர்.
அழகர்சாமி சாலையை கடக்க முயன்றபோது கேரள வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அழகர்சாமி மற்றும் பைக்கில் வந்த கேரள வாலிபர் கோழிக்கோடை சேர்ந்த இசாக் மகன் தம்ஜித்அலி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
மற்றொரு வாலிபர் படுகாயம் அடைந்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.