நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து போலீசாரும் மீட்பு பணிகளை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100 சட்டம் ஒழுங்கு போலீசார், 200 ஆயுதப்படை போலீசார், 150 ஊர்காவல் படையினர் மற்றும் 65 பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சென்னை, மதுரை, விருதுநகர், திண்டு கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் 200 பேரும் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் வாரிய அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புபணிகளை ஏ.டி.ஜி.பி. ஆஷிஷ்பங்க்ரா, தென் மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார்யாதவ், டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவல கத்தில் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்திலும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து தூத்தூர் மறைவட்ட அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப் பாட்டு அறையை ஏ.டி.ஜி.பி. ஆஷிஷ்பங்க்ரா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அங்கு மீனவ பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்கிருந்த மீனவ பிரதிநிதிகள் கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தத்தளித்து வருவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.டி.ஜி.பி. ஆஷிஷ் பங்க்ரா உறுதியளித்தார்.