

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் ரகசிய நிலவறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர ஆபரணங்கள் அடங்கிய பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்குள்ள பெரிய நிலவறையான ‘பி’ நிலவறை இன்னும் திறக்கப்படவில்லை. இந்த நிலவறையிலும் விலைமதிக்க முடியாத பொக்கிஷம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுபற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
தற்போது பத்மநாப சுவாமி கோவில் அதிநவீன பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த கோவிலின் முக்கிய பகுதிகள் நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் கமாண்டோ வீரர்களும் இந்த கோவிலின் பாதுகாப்பு பணியை ஏற்று உள்ளனர். இங்கு தனியாக போலீஸ் நிலையமே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. அதன்பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது கமாண்டோ வீரர்கள் பத்மநாபசுவாமி கோவிலின் முக்கிய இடங்களில் கைகளில் ஆயுதங்களுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்தபடியே அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பத்மநாபசுவாமி கோவிலின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் வகையில் இந்த கமாண்டோ வீரர்களில் சிலரை கோவிலை சுற்றி ரோந்துபணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் கமாண்டோ வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் பத்மநாப சுவாமி கோவிலை வலம் வருவார்கள். மேலும் இந்த கோவிலின் புனித தீர்த்தமான பத்ம தீர்த்த குளப்பகுதியிலும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.