ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்வு: ரூ.19.77 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் நிதியாக 19.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்வு: ரூ.19.77 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு
Published on

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உணவு வழங்க பயன்படும் அத்தியவாசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தினாலும், தற்போது நடைமுறையில் உள்ள கட்டணத்திற்குள் மாணாக்கர்களுக்குச் சிறந்த உணவு வழங்க இயலாத சூழ்நிலையை கருத்தில் கொண்டும், 2017-2018ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

2017-2018ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு உணவுக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.755/-லிருந்து ரூ.900/- ஆகவும், கல்லூரி மாணவ / மாணவியருக்கு உணவு கட்டணம் மாதம் ஒன்றுக்கு ரூ.875/-லிருந்து ரூ.1000/- ஆக உயர்த்தியும் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த உயர்த்தப்பட்ட உணவுக் கட்டணம் 2017-2018ஆம் கல்வியாண்டு ஜூன் 2017 முதல் மாணாக்கர்களுக்கு உணவு வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அனுமதி வழங்கியதோடு, அதற்கான கூடுதல் செலவினத் தொகையான 19 கோடியே 77 லட்சத்து 21 ஆயிரத்து 880 ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டார்கள். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள், உண்டுஉறைவிடப் பள்ளிகள், தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி விடுதிகள் ஆகிய 1714 விடுதிகளில் தங்கி பயிலும் 1,38,058 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com