

நெல்லை மாவட்டம் முக்கூடலில் நேற்ரு இரவு காங்கிரஸ் சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள முறையாக தங்களை அழைக்கவில்லை என்று நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர். குஷ்பு நெல்லை வந்தபோது நெல்லையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் பூட்டப்பட்டது. குஷ்புவை வரவேற்க முக்கிய தலைவர்கள் யாரும் செல்லவில்லை.
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது, “நான் கட்சியை வளர்க்க பாடுபடுகிறேன். அவர்கள் கட்சியை வளர்க்க நினைக்கவில்லை” என்று கூறினார்.
இந்த நிலையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் முன்னாள் மத்திய மந்திரியும் தென்மாவட்ட மூத்த காங்கிரஸ் தலைவருமான தனுஷ்கோடி ஆதித்தனிடம் பேசி அவரை தலைமை தாங்க செய்தனர்.
இதனால் எந்த பிரச்சினையும் இல்லாமல் காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், ராஜீவ்காந்தி ஆகியோர் சிலைக்கு அடிக்கல் நாட்டப்படும் என்று அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் போலீசார் அரசு அனுமதி பெறாமல் சிலை வைக்க அடிக்கல் நாட்டக்கூடாது, அப்படி அடிக்கல் நாட்டினால் கூட்டம் நடத்த அனுமதி தரமாட்டோம்” என்று கூறினார்கள்.
இதனால் அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியை தள்ளிவைத்துவிட்டு பொதுக்கூட்டம் நடத்தினர். அதற்கு போலீசார் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கொடுத்தனர். ஆனால் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தேர்தல் நடைமுறை இல்லாததால் நீண்ட நேரம் பேசினார்கள்.
இறுதியில் நடிகை குஷ்பு இரவு 10 மணியை கடந்த பிறகும் கூட்டத்தில் பேசினார். இதனால் போலீசார் உடனடியாக கூட்டத்தை முடிக்க சொல்லி கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களை வலியுறுத்தினர். ஆனால் குஷ்பு இரவு 10.30 மணியை கடந்த பிறகுதான் தனது பேச்சை முடித்தார்.
இதனால் முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி புகாரின்பேரில் 143, 188 ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கூட்டம் நடத்திய பாப்பாக்குடி ஒன்றிய தலைவர் ஹரிநாராயணன், முக்கூடல் நகர காங்கிரஸ் தலைவர் திரவிய சுப்பிரமணியன் ஆகிய 2 பேர் மீதும் மற்றும் பெயர் குறிப்பிடாமல் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிலர் என்று மொத்தம்10 பேர் வரை வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சிலர் என்பதில் நடிகை குஷ்புவும் அடங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஷ்பு பேசிய கூட்டத்துக்கு கடைசிவரை நெல்லையில் உள்ள 3 மாவட்ட தலைவர்களும் பங்கேற்கவில்லை. முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்கவில்லை. ஆனால் காங்கிரஸ் தொண்டர்கள் அந்தப் பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews