

சென்னை:
நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல்-அமைச்சராக பதவியேற்ற அம்மா படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். அதனை தொடங்கியும் வைத்தார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும், மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவன செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் தினகரனையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு விஷால் கூறியுள்ளார். #tamilnews