சஞ்சய் தத் மாநில அரசால் விடுவிக்கப்பட்டார்: ஆர்.டி.ஐ. தகவல்

மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டார் என ஆர்.டி.ஐ. தகவல் தெரிவிக்கின்றது.
சஞ்சய் தத் மாநில அரசால் விடுவிக்கப்பட்டார்: ஆர்.டி.ஐ. தகவல்
Published on

மும்பை குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 5 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு குறைத்தது. மும்பை எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட அவர், தண்டனை காலம் முடிவதற்கு முன்னே விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் நீண்டகாலமாக சிறையில் இருக்கும் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், எந்த அடிப்படையில் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புனே எரவாடா சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இதில் அவருக்கு தகவல்கள் அளிக்கப்படாததை தொடர்ந்து மேல்முறையீடும் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு புனே தகவல் ஆணையம் முன்பு விசாரணை நடந்தது. அப்போது, தனது விடுதலை தொடர்பான தகவல்களை பேரறிவாளனுக்கு அளிக்கக்கூடாது என எரவாடா சிறை நிர்வாகத்துக்கு சஞ்சய் தத் கடிதம் எழுதியிருப்பதாக கூறிய சிறை அதிகாரி, அந்த கடிதத்தையும் சமர்ப்பித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பேரறிவாளன் தரப்பு வக்கீல் நிலே‌ஷ் உகே, ஒரு தண்டனை கைதிதான் மாநில அரசை வழிநடத்துவாரா? என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், இந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத் விடுதலை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பேரறிவாளன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டு உள்ளது.

இந்த பதிலில், நடிகர் சஞ்சய் தத் மகாராஷ்டிர அரசால் விடுதலை செய்யப்பட்டார். அவரை விடுவிப்பது பற்றி மத்திய அரசுடன் எவ்வித அதிகாரப்பூர்வ தொடர்பும் இல்லை என எரவாடா சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com