

நாகர்கோவில்:
ஆசாரிப்பள்ளம் ராணித் தோட்டம் தடி டெப்போ ரோட்டையைச் சேர்ந்தவர் நோபல் (வயது 24).
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுபின், சுஜித், சபரீஷ், முத்துகுமார், ராஜேஷ், சுயம்பு ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று நோபல் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்தசுபின், சுஜித், சபரீஷ், முத்துகுமார், ராஜேஷ், சுயம்பு ஆகிய 6 பேரும் நோபலிடம் தகராறில் ஈடுபட்டனர்.
திடீரென அவரை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார்கள். அவரது சத்தம் கேட்டு நோபலின் தாயார் எலிசபெத் வெளியே ஓடி வந்தார். மகன் நோபலை வெட்டிய கும்பலிடம் இருந்து அவரை காப்பாற்ற முயன்றார்.
அப்போது அந்த கும்பல் எலிசபெத்தையும் பிடித்து கீழே தள்ளியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். பின்னர் அங்கிருந்த அந்த கும்பல் தப்பியோடி விட்டது. படுகாயமடைந்த நோபல், எலிசபெத் இருவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து நோபல் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமனகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சுபின், சுஜித், சபரீஷ், முத்துகுமார், ராஜேஷ், சுயம்பு ஆகிய 6 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீசார் சுபின், சுஜித், ராஜேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுபின், ராஜேஷ் ஆகிய இருவரின் பெயர்களும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சுபின் மீது கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. சுஜித், ராஜேஷ் மீது கோவை மாவட்டம் ஆனைமலையில் நடந்த கொலை வழக்கு ஒன்று உள்ளது.
கைதான 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.