விபத்தில் பலியான தொழிலதிபர் அணிந்திருந்த செயினை திருடி சென்ற மர்மநபர்கள்

திருச்சியில் கார் விபத்தில் பலியான தொழிலதிபர் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்மநபர்கள் திருடி சென்றனர். அவர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
விபத்தில் பலியான தொழிலதிபர் அணிந்திருந்த செயினை திருடி சென்ற மர்மநபர்கள்
Published on

கே.கே.நகர்:

திருச்சி பாலக்கரை பீம நகரை சேர்ந்தவர் பாரதி ராஜா( வயது38). கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார். இவரது நண்பர் அப்துல்மஜித் (39).

இவர்கள் 2 பேரும் நேற்றிரவு காரில் திருச்சி விமான நிலையம் அருகே கருப்பு கோவில் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் பாரதி ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்துல்மஜித்துக்கு கால் முறிந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்துல்மஜித்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாரதிராஜா உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நிகழ்ந்ததும் உயிரிழந்த பாரதிராஜா அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். மனிதாபமற்ற முறையில் நடந்து கொண்ட மர்மநபர்கள் யாரென்று போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com