ஆரல்வாய்மொழி அருகே விபத்து: புது மாப்பிள்ளை பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரல்வாய்மொழி அருகே விபத்து: புது மாப்பிள்ளை பலி
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணாடி பாலகிருஷ்ணன். அ.தி.மு.க. நிர்வாகி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் ஆரல்வாய்மொழி 9-வது வார்டு முன்னாள் கவுன்சிலர்கள்.

பாலகிருஷ்ணனின் மகன் ராஜகுரு(வயது27). இவர் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு காற்றாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் சீதப்பாலை அடுத்த பூலாங்குழியைச் சேர்ந்த மெர்லின்ஷீபா(24) என்பவருக்கும் கடந்த 18 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மெர்லின்ஷீபா 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று அவரை பார்ப்பதற்காக புதுமாப்பிள்ளை ராஜகுரு மோட்டார் சைக்கிளில் பூலாங்குழி சென்றார்.

தாழக்குடி அவ்வையார் அம்மன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜகுரு சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் ராஜகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ராஜகுருவின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர் கள் கதறி அழுதனர்.

ராஜகுருவின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்த வாலிபரும் அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அவரை போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை விடுவித்து விட்டதாக தெரிகிறது. இது ராஜகுருவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. இன்று அவர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். விபத்தை ஏற்படுத்திய வாலிபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீசார் மீண்டும் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com