

புதுச்சேரி:
புதுவை கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
யூனியன் பிரதேச சட்டப்படி தனக்கே முழு அதிகாரம் உள்ளது என கவர்னர் கிரண்பேடி கூறி வருகிறார். யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் இருக்கும் போது மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிகாரம் என அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இரு தரப்பினரும் மத்திய அரசிடம் ஒருவரை யொருவர் புகாரும் செய்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் இதுவரை நேரடியாக தலையிடவில்லை. இருப்பினும் கவர்னருக்கு முழு அதிகாரம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியது.
இந்த நிலையில் தன்னுடைய அதிகாரத்தை ஒத்துக்கொண்டு ஒத்துழைப்பு தாருங்கள் என கவர்னர் கிரண்பேடி புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகை மக்கள் பணிகளை செய்வது, எல்லோருக்கும் ஏன் எரிச்சலூட்டுகிறது என்று தெரியவில்லை. யூனியன் பிரதேச சட்டத்தின்படி கோப்புகளுக்கு கவர்னரின் அனுமதி தேவை என்பதால், கவர்னர் மாளிகைக்கு பல கோப்புகள் வருகின்றன. சில கோப்புகள்தான் மேலும் தகவல்களுக்காக நிறுத்தப்படுகிறது. கவர்னரின் முடிவு இறுதி என சட்டம் சொல்கிறது.
முதல்வர், அமைச்சர்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றால் அதைவிட கவர்னருக்கு அதிக அதிகாரம் உள்ளது. இதை மக்கள் பிரதிநிதிகள் ஒத்துக்கொண்டு மதிக்க வேண்டும்.
தொடர்ந்து என்னிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தால் நம்முடைய சக்திதான் வீணாகும். அது போல் வீணாகும் சக்தியை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தலாம்.
உள்துறை மந்திரிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினோம். எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பு, கவர்னரின் வேலை ஆகியவற்றை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் சொல்லி விட்டது.
வாய்க்கால் அடைப்பு, தூர்ந்து போன குளத்தை பார்வையிடுவதும் கவர்னரின் வேலைதான். பொதுமக்களை சந்தித்து குறைகளை ஏன் கேட்க கூடாது. கவர்னரை ஏன் பொதுமக்கள் பார்க்கின்றனர்.
அதே வேளையில் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பார்க்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது. வார ஆய்வின் போது, மக்கள் பிரதிநிதிகள் அழைத்தேன். அவர்கள் வரவில்லை எனில் என்னால் என்ன செய்ய முடியும்? மூத்த அதிகாரி கூட மக்களின் குறைகளை சந்தித்து கேட்க மறுக்கிறார்.
மக்கள் பிரதிநிதியாக நீங்கள் உங்களது கடமையை செய்யுங்கள். மக்கள் பணம் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஏமாற்றினால் தண்டிக்கப்படுவீர்கள். முதலில் தொகுதிக்கு செல்லுங்கள். மக்களின் குறைகளை தீர்த்து வையுங்கள்.
நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றினால் ஓரிரு மாதங்களில் புதுவையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லலாம். மக்களும் இதை தான் எதிர்பார்க்கின்றனர். இப்படி செய்தால் நம்மிடையே ஏன் மோதல் வரப்போகிறது.
இவ்வாறு கவர்னர் கடிதத்தில் கூறியுள்ளார்.