அப்துல் ரகுமான் மறைவு: தலைவர்கள் இரங்கல்

கவிக்கோ என்றழைக்கப்படும் அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அப்துல் ரகுமான் மறைவு: தலைவர்கள் இரங்கல்
Published on

சென்னை:

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:-

இன்று அதிகாலையில் ‘கவிக்கோ’ அப்துல்ரகுமான் மரணமடைந்தார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், இலக்கிய உலகத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்தின் மீது பற்றும், தலைவர் கருணாநிதி மீது பாசமும், தமிழுடன் இணை பிரியாத வாழ்வும் நடத்திய கவிஞரின் பிரிவு தமிழகத்தை தவிக்கவிட்டுள்ள இழப்பு, குறிப்பாக இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாது பேரிழப்பு. “தமிழின் முதன்மையான கவிஞர்களில் ஒருவர்”, “கன்னித்தமிழுக்கு கிடைத்த வெகுமானம்” என்று தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பட்ட “கவிக்கோ” அப்துல் ரகுமானின் கவியுலகப்பணி தமிழினத்திற்கு பெருமை சேர்த்தது.

இன்றைக்கு ‘கவிக்கோ’ அப்துல் ரகுமான் “விதை போல் விழுந்திருக்கிறார்”. அவர் மறைந்தாலும், அவரது கவிகள் பாடிக் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

தமிழ் இலக்கியத்தின் சுவையை தமது கவிதை வரிகளால் பெருமைப்படுத்தி வந்த கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் ஆழமான பற்றும், ஈடுபாடும் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கும், அன்னை தமிழுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

தமிழகத்தின் சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், இலக்கியவாதி கவிக்கோ அப்துல் ரகுமான் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன்.

கவிக்கோ எனப் போற்றப்படும் இவர் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் அன்பைப் பெற்றவர்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ:-

காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைத்த கவிக்கோ என்ற கவிதைப் பறவை விண்ணில் சிறகடித்துப் பறந்து விட்டது.

பொடா சிறை வாசத்தில் நான் 19 மாதங்கள் அடைபட்டுக் கிடந்த போது வேதனையுற்று அவர் தீட்டிய கவிதை எனக்குக் கிடைத்த பட்டயம்.

தமிழில் கவிதை என்று சொன்னால், கவிக்கோவைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. அவருடைய கருத்துகள், அவர் தந்த படைப்புகள், கவிதையால் அவர் காட்டிய பாதை, அவர் வாழ்ந்த வாழ்க்கை தமிழகத்தின் கவிதைத் தலைமுறைக்கு என்றைக்கும் வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com