

சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியின் பா.ஜ.க. பாராளுன்ற உறுப்பினராக இருந்த இந்தி நடிகர் வினோத் கன்னா கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். இந்த தொகுதியில் அக்டோபர் 11-ம் தேதி இடைதேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்தது.
காங்கிரஸ் சார்பில் சுனில் ஜாகர், பா.ஜ.க. சார்பில் சுவரன் சலேரியா, ஆம் ஆத்மி வேட்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் சுரேஷ் கஜூரியா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வினோத் கன்னா தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்ற இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க. நம்பிக்கை வைத்திருந்தது. அதேவேளையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 117 இடங்களில் 77 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரசும் தங்கள் வேட்பாளர் நிச்சயமாக வெற்றி பெறுவார் என கருதியது. சட்டசபையில் 20 உறுப்பினர்களுடன் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியும் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்தது.
சுமார் 15 லட்சம் வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலின்போது 1257 பகுதிகளில் 1781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 56 சதவீதம் வாக்குகள் பதிவாகின. சுமார் 8 லட்சம் மக்கள் வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுனில் ஜாஹர் ஆரம்ப சுற்றில் முன்னிலை வகித்தார்.
முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் தொடங்கிய இந்த முன்னேற்றம் அடுத்தடுத்த சுற்றுகளிலும் தொடர்ந்தது. பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட சலரியா இரண்டாவது இடத்திலும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் பின்தொடர்ந்தனர்.
இறுதிச் சுற்றுக்கு பின்னர் வெளியான முடிவுகளின்படி, காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாகர் 4,99,752 பெற்று 1,92,219 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சலரியாவை வீழ்த்தினார்.
அவருக்கு அடுத்தபடியாக, பா.ஜ.க. வேட்பாளர் சுவரன் சலரியாவுக்கு 3,06,533 வாக்குகள் கிடைத்தன. மூன்றாவது இடத்தில் உள்ள ஆம் ஆத்மி வேட்பாளர் சுரேஷ் கஜுரியா 23,579 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பா.ஜ.க. வசம் இருந்த குருதாஸ்பூர் தொகுதி தற்போது காங்கிரஸ் கைக்கு மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.