

புதுடெல்லி:
அரசு திட்டங்களின் மூலம் ஆதாயம் அடைய ஆதார் எண் கட்டாயம் என்னும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தும், வங்கி கணக்குகள், கைபேசி இணைப்புகளுக்கு ஆதார் எண் கட்டாயம் என்னும் திட்டத்தை எதிர்த்தும் பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகளின்மீது நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தீர்மானித்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இவ்வழக்குகளின் விசாரணையின்போது, மேற்படி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட் இவ்வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வின் முன்னர் இந்த மாதத்தின் கடைசி வாரத்தில் (27-ம் தொடங்கி) இறுதிகட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கிகள் மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆதார் இணைக்க வேண்டும் என்று குறுஞ்செய்தி அல்லது மெயில் அனுப்பினால் அதில், இணைப்பிற்கு டிசம்பர் 31, 2017 வரை காலக்கெடு உள்ளது என குறிப்பிட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.