

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கையப்பமங்கலத்தை சேர்ந்தவர் கிரிசன் (வயது 43). இவர் ஒத்தப்பாலம் அம்பலப்பரம்பு என்ற இடத்தில் ஜோதிட நிலையம் வைத்து ஜோதிடம் பார்த்து வருகிறார்.
இவர் திருவல்லா என்ற இடத்தில் உள்ள ஒரு லாட்டரி கடைக்கு கிரிசன் சென்றார். கடை உரிமையாளரிடம் 10 லாட்டரி சீட்டுகளை கொடுத்து இதில் தலா ரூ.1000 பரிசு விழுந்துள்ளது பணத்தை கொடுங்கள் என்று கேட்டார். லாட்டரி சீட்டுகளை வாங்கி பார்த்த கடை உரிமையாளருக்கு சீட்டு போலியாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனை வெளியே காட்டாத கடை உரிமையாளர் பணம் எடுத்து வந்து தருகிறேன் என்று கூறிவிட்டு கைப்பமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜோதிடர் கிரிசனை பிடித்து அவர் கொடுத்த லாட்டரியை சோதனை செய்தனர். அவைகள் போலி லாட்டரி சீட்டுகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து 10 லாட்டரி சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் போலி லாட்டரி சீட்டு கொடுத்து பணம் பெற முயன்றதை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரது ஜோதிட நிலையத்திற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு லாட்டரி அச்சடிக்கப்படும் காகிதங்கள், கம்ப்யூட்டர், அச்சு எந்திரம் மற்றும் மேலும் பரிசு விழுந்த 10 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
பரிசு விழுந்த லாட்டரி எண்ணை குறித்து வைத்து விட்டு அதனை போலியாக தயாரித்து லாட்டரி கடைகளில் சீட்டு கொடுத்து பணமாக பல இடங்களில் மாற்றியது தெரியவந்தது. அதிக பட்சமாக ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை மாற்றியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து லாட்டரி கடை உரிமையாளர் ஒருவர் கூறும்போது, கேரளா அரசு அச்சடிக்கும் லாட்டரிகள் பெரும்பாலும் கோவை, திருப்பூர், ஈரோடு, பழனி ஆகிய இடங்களுக்கு கடத்தப்படுகின்றன. கேரளாவில் விற்பனை யாகும் லாட்டரியை விட தமிழ் நாட்டில் கேரள லாட்டரி அதிகம் விற்பனையாகிறது.
தமிழ்நாட்டில் விற்பனையாகும் லாட்டரிகளில் பரிசு விழுந்தால் கேரளாவை சேர்ந்தவர்கள் மூலமாகத்தான் பரிசு பெற முடியும். இதனை பயன்படுத்தி இதுபோன்ற மோசடி நபர்கள் கடைகளில் போலி லாட்டரி சீட்டு கொடுத்த பரிசு வாங்கிச்சென்று விடுகின்றனர்.