

அரவக்குறிச்சி:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராணி (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம்வகுப்பு படித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராணியின் தந்தை விபத்தில் இறந்து விட்டார். இதனால் தாயின் அரவணைப்பில் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் ராணி வீட்டின் அருகில் அவரது உறவினரான சங்கர் மகன் லோகநாதன் (25) வசித்து வந்தார். இதனால் ராணியும், லோகநாதனும் நெருங்கி பழகி வந்தனர். இந்த பழக்கத்தை பயன் படுத்தியும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியும் ராணியுடன், லோகநாதன் பலமுறை உடலுறவு கொண்டார். இதில் ராணி கர்ப்பமானார்.
தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த ராணியின் தாய், அரவக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் , வெல்டரான லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 9-ம்வகுப்பு மாணவியை வாலிபர் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.