ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

ஈரோட்டில் தோழியுடன் நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

ஈரோடு:

ஈரோடு கள்ளுக்கடை மேடு, காதர் மைதீன் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 45). இவர் கள்ளுக்கடை மேடு பகுதியில் உள்ள ஒரு மாவு அரைக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

ராஜேஸ்வரி தினமும் காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். அதைப்போல் நேற்று மாலையும் வேலையை முடித்து கொண்டு கடையில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக தனது தோழியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

கள்ளுக்கடை மேடு தங்க பெருமாள் வீதியில் சென்று கொண்டிருந்த போது அவர்களது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர் அதில் பின்னால் உட்கார்ந்து கொண்டு வந்த நபர் திடீரென ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தான். இதை சற்றும் எதிர்பாராத ராஜேஸ்வரி மற்றும் அவரது தோழி திருடன்.. திருடன்.. என கத்தினர். ஆனால் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் வணிக நிறுவனங்கள் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் அதன் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com