24 மணி நேரமும் கடைகளை திறக்க 9 நிபந்தனைகள் - மதுரை கலெக்டர் அறிவிப்பு

மதுரையில் கடைகள், நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க கீழ்க்கண்ட பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுமாறு மதுரை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் கடைகளை திறக்க 9 நிபந்தனைகள் - மதுரை கலெக்டர் அறிவிப்பு
Published on

மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சாந்த குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலைமைகளை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக முறைப்படுத்தவும், வணிகத்தை எளிதாக்கவும் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கவும் மத்திய அரசால் பரிந்துரைத்த கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி வரைமுறைப்படுத்துதல் மற்றும் சேவை நிபந்தனைகள்) மாதிரி சட்ட மசோதாவை நிறைவேற்றும் வகையில் 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டும் 24 மணி நேரமும் இயக்கிட (3 ஆண்டுகளுக்கு) அனுமதித்து புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி மதுரையில் 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்கள் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்க கீழ்க்கண்ட பாதுகாப்பு மற்றும் நிபந்தனைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.

கடைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும் மற்றும் பணியாளர்களின் வேலை விபரத்தினை 1948-ம் வருட தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளில் தெரிவித்துள்ளவாறு படிவம்-5ல் குறிப்பிட்டு நிறுவனத்தில் நன்கு தெரியும்படி வெளிகாட்டி வைக்கப்பட வேண்டும்.

* பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் குறித்த விவரங்களை நிறுவனத்தில் நன்கு தெரியும்படி வெளிகாட்டி வைக்கப்பட வேண்டும்.

*பணியாளர்களின் ஊதியம் மற்றும் மிகை ஊதியத்தினை அவர்களின் சேமிப்பு வங்கி கணக்கிலேயே வரவு வைக்க வேண்டும்.

* பணியாளர்களை ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மேலாகவும், ஒருவாரத்தில் 48 மணி நேரத்தற்கு மேலாகவும் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. மேலும் பணியாளர்கள் மிகப்பணி பார்க்கும் தேர்வில் பணியாளரின் மொத்த வேலை நேரம் நாள் ஒன்றுக்கு 10½ மணி நேரத்திற்கு மிகாமலும் வாரத்திற்கு 57 மணி நேரத் திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

* நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் மற்றும் விடுமுறைக்கு முரணாகவும் அல்லது சட்டத்திற்கு முரணாக மிகைப்பணி செய்ய கோரினாலும் சம்பந்தப்பட்ட வேலை அளிப்பவர் மீது 1947-ம் வருட தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

* சாதாரண நேரங்களில் பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக்கூடாது. இருப்பினும் வேலை அளிப்பவர் பெண் பணியாளரிடம் எழுத்துபூர்வமாக சம்மத கடிதத்தினை பெற்று அவருக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்பு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வேலை செய்ய அனுமதிக்கலாம்.

* இரவு நேரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு தகுந்த போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும். அதன் விபரம் நிறுவனத்தின் பிரதான வாயிலின் அருகிலேயே வெளிகாட்டி வைக்கப்பட வேண்டும்.

* பணியாளர்களுக்கு ஓய்வறை, கழிவறை, பாதுகாப்பு பெட்டக வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும்.

* 2013-ம் வருட பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு பாதுகாப்பு குறைதீர்ப்பு) சட்டத்தின்படி பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வேலை வாய்ப்பளிப்பவர் மேற்படி சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு “உள்ளக பாலியல் புகார் குழு” அமைக்க வேண்டும்.

நிபந்தனைகளை பின்பற்றாத 10 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது 1947-ம் வருட தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்த விவரங்களை மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம் (முதல் தளம்) எல்லீஸ் நகர், மதுரை-625 016 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0452-2604388 என்ற தொலைபேசி எண்ணிலோ அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com