வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள்- 8 பேர் கைது

திசையன்விளை அருகே வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள்
வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்கள்
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோகுல கண்ணன் (வயது23). இவர் கடந்த 23-ந்தேதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அன்று காலை அவர் தனது நண்பர்களுடன் தெருவில் வைத்து வாளால் கேக் வெட்டினார். அப்போது அவரது நண்பர்கள் ஸ்பிரே அடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

வாளால் கேக் வெட்டிய இந்த வீடியோ வைரலாக பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்திய கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் இதுதொடர்பாக திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய கோகுல கண்ணன், ராமன் (27), முத்துக்குமார் (19), தனசேகர் (24), வெங்கடேஷ் (20), சொக்கலிங்கம் (58), ராமகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் (19), சுந்தரம் (45), துரைதாஸ் (16), சுடலை (17), கிருஷ்ணன் ஆகிய 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 147 (கலகம் செய்தல்), 290 (பொது இடத்தில் அத்துமீறுதல்) மற்றும் ஆயுத தடை சட்டப்பிரிவு என 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் துரைதாஸ், சுடலை, கிருஷ்ணன் ஆகியோரை தவிர மற்ற 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com