வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 700 பேர் ஸ்டிரைக்

இளநிலை உதவியாளருக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் 700 பேர் ஸ்டிரைக்
Published on

வேலூர்:

தமிழக ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலாளர்களின் இன்னல்களை போக்க கோரியும், இளநிலை உதவியாளருக்கு இணையாக ஊதியம் வழங்க கோரியும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஒன்றியங்களிலும் ஊராட்சி செயலாளர்கள் 700-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அலுவலகங்களில் அந்தந்த பகுதி ஊராட்சி செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தயாளன், சுசீந்திரன் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் சங்க ஒன்றிய தலைவர் அருண் பிரசாத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் பிரேம்குமார் கலந்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்தார். குடியாத்தம் ஒன்றியத்தில் மட்டும் 41 ஊராட்சி செயலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் வேலை நிறுத்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி செயலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். வட்டார தலைவரும், ஒன்றிய அலுவலக மேலாளருமான தமிழ்வாணன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதீப்குமார், சாமிநாதன், கார்த்திகேயன், சுரேஷ்குமார், சீனிவாசன் மற்றும் 47 ஊராட்சி செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com