ஜெயலலிதா மரணம் பற்றி 70 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்

ஜெயலலிதா மரணம் குறித்து 70 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவதற்காக வருகிற 22-ந் தேதி முதல் நேரில் ஆஜராகும்படி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
ஜெயலலிதா மரணம் பற்றி 70 பேர் பிரமாண பத்திரம் தாக்கல்
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு கடந்த மாதம் 25-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த விசாரணை கமிஷன் 3 மாதத்துக்குள் தனது விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாக ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று விசாரணை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரங்கள் அளித்துள்ளனர். இவர்கள் அனுப்பிய பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு குறித்து டாக்டர் சரவணன் சந்தேகத்தை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கும் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

ஜெயலலிதாவின் கைரேகையை, ரேகைகளை ஆய்வு செய்யும் தனியார் நிறுவனத்தில் சரிபார்த்தபோது அந்த ரேகை உயிரோடு இருந்தபோது பதிவு செய்யப்பட்ட ரேகை போன்று தெரியவில்லை என்பது தெரியவந்திருப்பதாகவும், இதன்மூலம் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் டாக்டர் சரவணன் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் விசாரணை ஆணையத்தின் முன்பு வருகிற 22-ந் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி டாக்டர் சரவணனுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதில், ‘பிரமாண பத்திரத்துடன் தாக்கல் செய்துள்ள ஆவணங்களின் மூல ஆவணங்களை உடன் கொண்டு வர வேண்டும். விசாரணை சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். தங்களுடன் வக்கீல் ஒருவரை அழைத்து வரலாம்.

குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ஆணையத்தின் முன்பு ஆஜராக தவறினால் தாங்கள் இல்லாமலேயே விசாரணை ஆணையம் விசாரணையை மேற்கொண்டு முடிவு செய்யும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆணையத்துக்கு பிரமாண பத்திரம் அனுப்பி உள்ள 70 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவடைந்த பின்பு ஆணையம் யார், யாரை விசாரிக்க வேண்டும் என்று கருதுகிறதோ அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணையை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. விசாரணைக்காக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டி இருந்தால் அதையும் நீதிபதி மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி முதல் தான் நேரடி விசாரணையை ஆணையம் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com