சென்னை விமான நிலையத்தில் ரூ.70 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக முதியவரை கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், துபாய் விமானத்தில் செல்ல வந்த பயணிகளை கண்காணித்தனர்.

அந்த விமானத்தில் பயணம் செய்ய காஞ்சீபுரத்தை சேர்ந்த நூர் முகமது சுல்தான் (வயது 60) என்பவர் வந்தார். பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு விமானத்தில் ஏற காத்திருந்த அவரிடம் சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது. மேலும் விமானத்தில் ஏற்ற அனுப்பப்பட்ட அவரது உடைமைகளும் கொண்டு வரப்பட்டு சோதனை செய்தனர்.

அதில் இருந்த ஒரு அட்டை பெட்டியில் புத்தகங்களுக்கு இடையே அமெரிக்கா டாலர்கள் மற்றும் சவுதி ரியால் ஆகியவற்றை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.70 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முதியவர் நூர் முகமது சுல்தானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com