விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 வீரர்கள் பலியான சம்பவம் - விசாரணைக்கு உத்தரவு

அருணாசல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 7 வீரர்கள் பலியான சம்பவம் - விசாரணைக்கு உத்தரவு
Published on

அருணாசல பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அருணாசல பிரதேசத்தில் இந்தியா-சீன எல்லைப்பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கான பொருட்களை ஏற்றிக்கொண்டு விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் உள்பட 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களுமாக 7 பேர் இருந்தனர்.

சீன எல்லையோரம் அமைந்துள்ள தவாங் நகருக்கு அருகே உள்ள கரிமுராவில் இருந்து புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர் சுமார் 6.30 மணியளவில் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர சம்பவத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விழுந்த இடத்தை கண்டறிந்த உயர் அதிகாரிகள், அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அப்பகுதி, கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரம் உடையதாகும். அங்கு சிதறிக்கிடந்த உடல்களை மீட்ட அதிகாரிகள் அவற்றை கிர்மு ஹெலிகாப்டர் தளத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. இதில் விக்ரம் உபத்யாய், எஸ்.திவாரி, ஏ.கே.சிங், கவுதம், சதீஷ்குமார் ஆகிய விமானப்படை வீரர்களும், இ.பாலாஜி மற்றும் எச்.என்.டேகா ஆகிய ராணுவ வீரர்களும் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

ராணுவ போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் நடுத்தர எடை தாங்கும் இந்த எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர், ரஷிய தயாரிப்பு ஆகும். இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த விபத்து பாதுகாப்பு படையினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) விமானப்படை தினம் கொண்டாட இருக்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து விமானப்படையினருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமானப்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவ விமானங்கள் சமீப காலமாக விபத்தில் சிக்குவது குறித்து விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா நேற்று முன்தினம் கவலை வெளியிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com