

காரைக்கால்:
காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேர் கடந்த அக்டோபர் மாதம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
ராமேசுவரத்தில் இருந்து தங்கச்சிமடத்தை சேர்ந்த சார்லஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பாண்டி (வயது 35) உள்பட 5 பேரும், தங்கச்சிமடத்தை சேர்ந்த விசுவாசம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மரியநேசர் (32) உள்பட 8 பேரும், பாம்பனை சேர்ந்த அருள்சகாயம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரீகன்(35) உள்பட 4 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் 7-ந் தேதி வரை மொத்தம் 69 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 14 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை சிறைகளில் இருந்து 69 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று அதிகாலை காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து இலங்கை கடற்படை கப்பல் மூலம் அவர்கள் அழைத்து வரப்பட்டு காலை 9 மணியளவில் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலான ‘அமயா’ மூலம் காரைக்கால் கீழவாஞ்சூரில் உள்ள மார்க் தனியார் துறைமுகத்துக்கு மீனவர்கள் அனைவரும் நேற்று மதியம் வந்தனர்.
இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டண்டிங் அதிகாரி சோமசுந்தரம், மீனவர்களிடம் விசாரணை நடத்தி, அந்தந்த மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார். மீனவர்களை அழைத்துச்செல்ல அவர்களது உறவினர்களும், ஊர் பஞ்சாயத்தார்களும் அங்கு வந்திருந்தனர். விடுதலை ஆகி ஊர் திரும்பிய மீனவர்களை உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் விட்டு வரவேற்று அழைத்துச்சென்றனர். #tamilnews