காஷ்மீரில் போலீஸ் வேலைக்கு 67 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்

தீவிரவாதிகள் எதிர்ப்பை மீறி காஷ்மீரில் போலீஸ் வேலைக்கு 67 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
காஷ்மீரில் போலீஸ் வேலைக்கு 67 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பம்
Published on

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் 698 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான ஆள் தேர்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியில் காஷ்மீர் இளைஞர்கள் சேரக்கூடாது என பல்வேறு தீவிரவாத அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

இது குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு அச்சுறுத்தின. ராணுவ அதிகாரி லெப்டினைன்ட் உம்மர் பயாஸ் ஷோபியன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாதிதீன் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.

ஆனால் அதை காஷ்மீர் இளைஞர்கள் கண்டுகொள்ளவில்லை. மிரட்டலை புறக்கணித்துவிட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம் செய்தனர். 698 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு 67,218 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் காஷ்மீரில் 35,722 பேரும், ஜம்முவில் 31,496 பேரும் அடங்குவர். இவர்களில் 6 ஆயிரம் பேர் பட்டதாரி பெண்கள்.

இதற்கிடையே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு நேற்று ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. ராணுவ அதிகாரி உம்மர் பயாஸ் கடத்தி கொல்லப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு நடந்த உடல் தகுதி தேர்வில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களும் திரண்டு பங்கேற்றனர்.

இது குறித்து காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி., எஸ்.பி. வைத் கூறும்போது, "ஏராளமான காஷ்மீர் பெண்கள் அச்சமின்றி வந்து போலீஸ் ஆள் எடுக்கும் தேர்வில் ஈடுபட்டனர்.

போலீஸ் தேர்வுக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. பணிக்கு ஆட்கள் தேர்வு ஒளிவுமறைவின்றி நடைபெறும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com