ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒருவாரத்தில் என்ஜினீயரிங் படிப்பதற்கு 61 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். #AnnaUniversity
ஆன்லைன் பதிவு தொடங்கிய ஒருவாரத்தில் என்ஜினீயரிங் படிப்பதற்கு 61 ஆயிரம் பேர் விண்ணப்பம்
Published on

தமிழகத்தில் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ந்தேதி தொடங்கியது.

மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்வதற்காக 43 இடங்களில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன.

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க உதவி செய்வதற்காக செயல்படும் இந்த மையங்களில் மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் சென்று விண்ணப்பித்து வருகின்றனர். நேற்று வரை 61 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த மாதம் 30-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் 60 ஆயிரத்திற்கும் மேலான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதால் 1.50 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் எவ்வித குழப்பமும் இல்லாமல் கல்லூரிகள் பாடப்பிரிவுகளை தெரிவு செய்யவும், ஒதுக்கீட்டு ஆணை வழங்கவும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும் ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் புருஷோத்தமன் கூறியதாவது:-

நேற்று வரை 61,723 பேர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்னதாக ரேண்டம் எண் வழங்கப்படும். 43 மையங்களில் சான்றிதழ் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையங்களை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு அந்தந்த மையங்களில் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு சென்னையில் தான் சான்றிதழ் சரிபார்க்கப்படும். விளையாட்டு பிரிவின் ஒதுக்கீடு பெற விரும்புபவர்கள் கட்டாயம் சென்னைக்கு வர வேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com