

கோவை:
இரட்டை சிலை சின்னத்தை பெற லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தமிழகத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் கடந்த 2010-ம் ஆண்டு கோவை கணபதியில் சமையலறை உபகரணங்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்த ராஜவேலு என்பவரிடம் இடைத்தரகர் சுகேஷ் கர்நாடக முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி ராஜவேலுக்கு டெண்டர் எடுத்து தருவதாக ரூ.2½ லட்சம் மோசடி செய்தார்.
இதுகுறித்து ராஜவேலு கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகேஷ் மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் 2 பேரும் ஜாமீனில் வெளியேவந்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வருகிறது.
விசாரணைக்காக டெல்லி போலீசார் இடைத்தரகர் சுகேசை கடந்த மாதம் 22-ந் தேதி டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக அழைத்து வந்து மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு இன்று மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டு இருந்தார்.
இதற்காக சுகேசை டெல்லி போலீசார் பலத்த பாதுகாப்புடன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவை அழைத்துவந்தனர். பின்னர் அவரை கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து காலை 10.30 மணிக்கு சுகேசை கோவை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட்டு நம்பிராஜன் முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா, உதவி கமிஷனர் ஆசைதம்பி ஆகியோர் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் 60 பக்க குற்றப்பத்திரிகை நகலை நீதிபதி முன்னிலையில் சுகேசிடம் வழங்கினர்.
இதைதொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி நம்பிராஜன் கூறினார்.
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடைத்தரகர் சுகேசை கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லிக்கு சுகேசை போலீசார் அழைத்து சென்றனர்.